'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' வீட்டுக் கடன் திட்டம்‏



வளர்ந்த நாடுகளில் பல ஆண்டு காலமாக இருந்துவரும் இந்தத் திட்டம், கடந்த 2006-ம் ஆண்டு கடைசி வாக்கில் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது.

இதை வீட்டு வசதிக்கடன் வழங்கி வரும் ஒரு பிரபல நிறுவனம் முதன்முதலில் கொண்டு வந்தது. அதன்பிறகு முன்னணி தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் மளமளவென்று இத்திட்டத்தைக் கொண்டு வந்து விட்டன. 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' பற்றிய விவரம் இது...

இக்கடன் திட்டத்தின்படி, மூத்த குடிமக்களுக்கு சுமார் 15, 20 வருடங்களுக்கு அவர்களின் வயது மற்றும் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்படும். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ள ஒருவருக்கு வயது 65 என்றால் அவருக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு மாதா மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும்.

வயது 70 என்றால் சுமார் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும். இந்தக் கடன்தொகை, அதற்கான வட்டி, வீட்டின் உரிமையாளர் மற்றும் மனைவியின் மறைவுக்குப்பிறகு வீட்டை விற்று, எடுத்துக் கொள்ளப்படும். வழக்கமான வீட்டுக் கடனின் தலைகீழ் திட்டம்தான் இது.

அதாவது, வீட்டுக் கடனில், அதனை வாங்கியவருக்கு வீடு மீதான உரிமை ஆரம்பத்தில் குறைவாக இருக்கும். கடனை கட்டக் கட்ட இந்த உரிமை அதிகரித்துக்கொண்டே வரும். ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தில் இது தலைகீழாக இருக்கும். அதாவது, தொடக்கத்தில் அதிகமாக உரிமை இருக்கும்.

மாதத் தொகையை பெறும் காலம் அதிகரிக்க அதிகரிக்க, அந்த உரிமை குறைந்துகொண்டே வரும். அதிக மதிப்புமிக்க சொந்த வீடு உள்ள, அதேநேரத்தில் கையில் பணம் குறைவாக இருக்கும், நிலையான வருமானம் இல்லாத தம்பதிகளுக்கு ஏற்ற திட்டமாகும் இது.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கும், பிள்ளைகளால் கவனிப்பு இல்லாதவர்களுக்கும் இது கை கொடுக்கும்.

'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' கடன் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள்:

1. வீட்டின் உரிமையாளரின் வயது அறுபதுக்கு மேல் இருக்கவேண்டும்.

2. வசிக்கும் வீட்டில் குறைந்தபட்சம் ஓராண்டாவது இருக்கவேண்டும்.

3. குறிப்பிடப்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மாதத் தொகை நிறுத்தப்படும். ஆனால், வீட்டின் உரிமையாளர் அவரின் கடைசிகாலம் வரை அந்த வீட்டில் வசிக்கலாம். கணவர் இறந்துவிட்டாலும் மனைவி அவரின் கடைசி காலம் வரை அந்த வீட்டிலேயே இருக்கலாம்.

அதேபோல், மனைவி இறந்துவிட்டாலும் கணவர் கடைசி வரைக்கும் அந்த வீட்டில் வசிக்கலாம். அதாவது தம்பதிகள் இருவரின் மறைவுக்குப் பிறகுதான் வீட்டை வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.

4. சொத்தின் உரிமை தம்பதிகள் இருவருக்கும் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் கணவர் இறந்து விட்டால் அந்தத் தொகை மனைவிக்குக் கிடைக்கும்.

5. சொத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் தரப்படும். பணத்தை மாதா மாதம் வாங்கிக் கொள்ளலாம். அல்லது மொத்தமாக கூட வாங்கிக்கொள்ள முடியும்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

1. வழங்கும் தொகைக்கு சுமாராக 12- 13 சதவீத வட்டி கணக்கிடப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு அதிகம்.

2. பூர்வீக சொத்துக்குக் கடன் கிடையாது.

3. சர்வதேச அளவில் இதுபோன்று பெறப்படும் பணத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை. இந்தியாவில் இது குறித்து இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"